கோவை: கோவையில் பிடிபட்ட ரோலக்ஸ் காட்டு யானை, ஆனைமலை வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
கோவை தொண்டாமுத்தூரில் அவ்வப்போது ஊருக்குள் புகுந்த ரோலக்ஸ் காட்டு யானை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை அச்சுறுத்தி வந்தது.
இதனைத் தொடர்ந்து ரோலக்ஸ் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தச் சென்ற வனத்துறை மருத்துவரை அந்த யானை தாக்கியதில் மருத்துவர் படுகாயமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து கும்கி யானைகளின் உதவியுடன் ரோலக்சை கடந்த 17ம் தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்.
அந்த யானை டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. யானை ஆரோக்கியமாக இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து அதனை வனப்பகுதியில் விடுவிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி, ரோலக்ஸ் யானை இன்று ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மந்திரிமட்டம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் விடப்பட்டது.

