கோவை: மெட்ரோ ரயில் திட்டத்திற்காக 40 எம்.பிகளும் பாராளுமன்றத்தை முடக்குங்கள் அதுதான் தான் சரியாக இருக்கும் என எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக கொறடாவும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின் பேரில் அனைத்து இடங்களிலும் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்று வருகிறது என்றார்.
SIR பணிகள் தொய்வாக உள்ளது, என்றும் கோவை மாவட்டத்தில் அதிகமான இடங்களில் அதிகாரிகளை திமுகவினர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர் என்றார். திமுகவினரே மொத்தமாக SIR படிவங்களை வாங்கி சென்று விடுவதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் தேர்தல் ஆணைய உத்தரவை மீறி தவறான முன் உதாரணங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார்.
நியாயமான வாக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், தவறான வாக்குகள் இருந்து விட கூடாது என்றும், இரட்டை வாக்குகள் இருக்க கூடாது என்றும் கூறிய அவர், இந்த பணிகளை தீவிரமாக செய்ய வேண்டும் என அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் கோவையில் ஏராளமான பாலங்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என ஏராளமானவை கொண்டுவரப்பட்டது என்றும் அவர்,50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறினார்.
மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விளக்கம் கேட்டால் அதை நிவர்த்தி செய்து அனுப்பிட வேண்டும். கண்டிப்பாக கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் வலியுறுத்தி இருக்கிறார் எனவும் 2026ம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரான பிறகு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த மெட்ரோ ரயில் திட்டம், மீண்டும் அவர் முதல்வரானவுடனே கொண்டு வரப்படும்,இதே போல அத்திக்கடவு இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டமும் கொண்டு வரப்படும் என்றார்.
தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் வழங்கி இருக்கின்றார் என கூறிய அவர் எடப்பாடி பழனிச்சாமியார் எந்த முயற்சி எடுத்தாலும், மத்திய அரசிடம் இருந்து அவற்றை வாங்கி கொடுப்பார் என தெரிவித்தார். திமுக ஆட்சியில் எந்த திட்டமும் செயல் படுத்தபடவில்லை என கூறிய அவர், விடுபட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.
மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ஆரம்பகட்ட பணிக்கு 3 கோடி ரூபாய் அறிவித்தார், ஆனால் தற்பொழுது இரண்டு வழித்தடங்களில் மட்டும் மெட்ரோ ரயில் என திட்டமிட்டு இருக்கின்றனர், ஆனால் மெட்ரோ அனைத்து வழித்தடங்களிலும் கொண்டு வர வேண்டும் என கூறினார்.
மெட்ரோ தொடர்பாக விளக்கம் கேட்டு எந்த ஃபைல் சென்றாலும், அதை சரி செய்து அவர்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் திமுகவில் உள்ள 40 எம்பிக்கள் இந்த திட்டத்தை கேட்டு வாங்க வேண்டும், அதை விட்டுவிட்டு இங்கு போராட்டம் செய்தால் எப்படி சரியாக இருக்கும் என கேள்வி எழுப்பிய அவர் அங்கே சென்று போராட வேண்டும் எனவும், பாராளுமன்றத்தை முடக்குங்கள் அதுதான் தான் சரியாக இருக்கும் எனவும், எடப்பாடியாரும் அதைத்தான் கூறுவதாக தெரிவித்தார்.

