கோவை: கோவையில் மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது.
ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ‘சாரஸ்-2025’ எனும் மகளிர் சுய உதவி குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் விற்பனைக் கண்காட்சி கோவை கொடிசியா அரங்கில் இன்று துவங்கியுள்ளது.

இக்கண்காட்சியினை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும், சமுதாய திறன் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ்களையும் மற்றும் களப்பயிற்சி முடித்த கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி சான்றிதழ்களையும் வழங்கினர்.
இக்கண்காட்சி 23.12.2025 முதல் 01.01.2026 வரை காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெற உள்ளது.
இக்கண்காட்சியில் ஆந்திரா, ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் சார்பாக 10 அரங்குகளும், தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களை சேர்ந்த மகளிர் குழு சார்பில் 113 அரங்குகளும், பிற துறைகள் சார்பில் 10 அரங்குகளும், கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மகளிர் குழு சார்பில் 39 அரங்குகளும் என மொத்தம் 172 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இக்கண்காட்சியில் மரப்பொம்மைகள், மூலிகை சோப், மசாலா பொருட்கள், மரசெக்கு எண்ணெய், சாம்பிராணி, சணல்பை, சேலைகள், அலங்காரப் பொருட்கள், தேன், உணவு பொருட்கள்(முறுக்கு, கடலை மிட்டாய்) பூஜை பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தின் பிரத்தியேக பொருட்களான காஞ்சிபுரம் பட்டு / திருவண்ணாமலை ஆரணி பட்டு / தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மற்றும் கண்ணாடி ஓவியம்/ திருநெல்வேலி பத்தமடை மதிப்புக் கூட்டுப் பொருட்கள்/ இராமநாதபுரம் பனை ஓலை பொருட்கள்/ திருப்பூர் காட்டன் ஆயத்த ஆடைகள்/ திண்டுக்கல் சின்னாளபட்டி சேலைகள்/ சிவகங்கை செட்டிநாடு காட்டன் சேலைகள் / செங்கல்பட்டு சணல் பொருட்கள்/ நாமக்கல் கொல்லிமலை மிளகு / அரியலூர் மற்றும் கடலூர் முந்திரி / கோவில்பட்டி கடலை மிட்டாய் மற்றும் உடன்குடி கருப்பட்டி போன்ற பல்வேறு வகையான பொருட்கள் கண்காட்சியில் விற்பனை செய்யப்படுகிறது.
இக்கண்காட்சியில் பங்கேற்கும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தங்களது சந்தைப்படுத்துதல் உத்திகளை மேலும் வலுப்படுத்த ஏதுவாக பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் மூலம் பயிற்சிகளும் நடத்தப்பட உள்ளது.

