கோவை: கோவைக்கு நாளை முதலமைச்சர், துணை முதலமைச்சர் வருகையையொட்டி 1,000 போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நாளை மாலை மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு, வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.
அதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். அதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.
அவருக்கு விமான நிலையத்தில் தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரிகளும் வரவேற்க உள்ளனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு அவிநாசி ரோட்டில் உள்ள ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.
மதியம் அங்கிருந்து காரில் புறப்பட்டு மாலை பல்லடத்தில் நடைபெறும் மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டில் கலந்து கொள்கிறார். மாநாட்டை முடித்து கொண்டு இரவு கோவை விமான நிலையம் திரும்பி 8.30 மணியளவில் முதல்வர் சென்னை திரும்புகிறார்.
அதேபோல, நாளை மதியம் 1 மணியளவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். இங்கிருந்து காரில் புறப்பட்டு பல்லடம் மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
நிகழ்சியை முடித்து கொண்டு மீண்டும் கோவை வந்து அவிநாசி ரோட்டில் உள்ள ஓட்டலில் இரவு ஓய்வு எடுக்கிறார். இதை தொடர்ந்து நாளை மறுநாள் காலை ஆர்எஸ் புரம் சர்வதேச ஹாக்கி மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
அதற்காக அவர் ஓட்டலில் இருந்து கார் மூலம் ஆர்எஸ் புரம் செல்கிறார். மைதானம் திறப்பு விழாவை முடித்து கொண்டு ஈரோடு புறப்பட்டு செல்ல உள்ளார்.
நாளை மற்றும் நாளை மறுநாள் முதல்வர், துணை முதல்வர் வருகையையொட்டி கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. காவல் ஆணையர் சரவண சுந்தர், எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பேரில், 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

