ஆதிக்க சாதியினர்கள் தான் அமைச்சர்களாக உள்ளனர்- கொளத்தூர் மணி குற்றச்சாட்டு…

கோவை: ஆதிக்க சாதியினர்கள் தான் அமைச்சர்களாக இருப்பதாக கொளத்தூர் மணி குற்றம் சாட்டியுள்ளார்.

சாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கை எடுக்க் வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி உட்பட பல்வேறு முற்போக்கு இயக்கங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாதிய தீண்டாமைக்கு எதிராக பல்வேறு பதாகைகளை ஏந்தியும் ஓவியங்களை ஏந்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் தமிழக அரசு சாதிய தீண்டாமைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கொளத்தூர் மணி, சாதிய வாதிகளும் சாதிய சங்கத்தாரும் சமுதாயத்தை பின் நோக்கி எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்றார். சாதி ஒழிப்பிற்காகவும் உரிமையை மீட்டெடுக்கவும் முன்னேறுவதற்கும் ஜாதி சங்கங்கள் இருந்த நிலையில் தற்போது கள்ள சாராயம் விற்பவர்கள் கந்து வட்டிக்காரர்கள் கல்லூரி நடத்தி சாதி சங்கங்களை துவங்குகின்ற நிலையை தான் பார்த்து வருவதாக தெரிவித்தார்.

இவர்கள் சாதியத்தை கூர்மைப்படுத்தி மீண்டும் சாதிகளை வளர்க்க தான் முயற்சிக்கிறார்க்ள் என குற்றம் சாட்டிய அவர் பார்ப்பனியம் செய்த அதே கொடுமைகளை தான் சாதி சங்கம் என்ற பெயரில் இருப்பவர்கள் மீண்டும் செய்வதாக தெரிவித்தார். ஜாதி கயிறு என்ற ஒன்றை உருவாக்கி அதை வேண்டாம் என்று கூறிய போதிலும் அந்த கயிறை ஆசிரியரும் உயர் நீதிமன்ற நீதிபதியும் கட்டிக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார்.

மதசார்பற்ற நாடு என்கின்ற பொழுது இவர்கள் பூசாரியா? என்று சந்தேகப்படும் அளவிற்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி வருவதாகவும் விமர்சித்தார். மேலும் சாதிய பெயரில் தற்பொழுது மேட்ரிமோனிகளும் நடத்தப்பட்டு வருகிறது என்று கூறிய அவர் தற்பொழுது ஊருக்குள் பேருந்துகள் செல்லாத தீண்டாமை கூட வந்து விட்டதாக கூறினார். இது குறித்த பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த அவர் அதிகாரிகள் சமூகத்தின் பணியை செய்வதற்கு மறுக்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.

இரட்டை குவளை முறை குறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை சரியாக பயன்படுத்தாமல் இருக்கும் அதிகாரிகள் மீதும் தற்பொழுது வழக்கு பதிவு செய்யலாம் என்ற நடைமுறை இருப்பதை குறிப்பிட்டார். தற்பொழுது உள்ள ஆட்சியில் பல வகையில் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் இந்த விஷயத்தில் கவனம் குவிய மறுப்பதாக தெரிவித்தார். ஆணவக் கொலைகள் செய்யும்பொழுது அவர்களுக்கான தண்டனை ஏன் கொடுக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

ஆதிக்க சாதிகள் தான் அந்தந்த மாவட்டங்களுக்கு அமைச்சராக இருப்பதாக குற்றம் சாட்டிய அவர் அவர்களது சாதியினரை அனைத்து அரசு அலுவலகங்களிலும் நிரப்பி கொள்கிறார்கள் அப்படி இருக்கும் பொழுது அவர்கள் சாதிய வாதிகளாகத்தான் இருக்கிறார்களே தவிர அரசு அதிகாரிகளாக சிந்திப்பதில்லை என்ன நடந்தாலும் அமைச்சர் பார்த்துக் கொள்வார் என்று திமிருடன் அவர்கள் நடந்து கொள்வதாகவும் தெரிவித்தார். எனவே முதலமைச்சர் இதனை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அமைச்சர்களாக இருக்கும் பலரும் சாதியவாதிகளாகவும் சாதிய மாநாடுகளில் பேசி நம்முடைய சாதிக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் கூறுவதாகவும் தெரிவித்த அவர் இவர்களைப் போன்றவர்கள் திமுக கட்சியில் இருக்கலாமா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் பல்வேறு நாடுகளில் இருக்கும் நம் நாட்டின் இளைஞர்கள் சாதியை எதிர்ப்பிற்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

சாதி ரீதியான அமைச்சர்கள் அந்த காலத்தில் இருந்தே இருந்து வந்ததாக குறிப்பிட்ட அவர் இந்த ஆட்சியில் ஆவது மாற்றம் ஏற்பட வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். தற்போதைய காலகட்டத்தில் அர்ச்சகராக முடியவில்லை என்றும் அதற்காக கோவிலுக்குள் சென்றால் தடுப்பதாகவும் அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். அனைத்தையும் வாக்கு கணக்குகள் ஆக மற்றும் பார்க்கக்கூடாது குறைந்தபட்சம் தேர்தல் முடிந்த பிறகு முதல் நடவடிக்கையாக இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் போக்குவரத்தில் தீண்டாமை கடைபிடிக்கப்படும் ஊர் மக்கள் முதலில் வெளிவந்தால் அவர்களுடன் துணை நிற்போம் எனவும் தெரிவித்தார்.

Recent News

Video

Join WhatsApp