கோவை: அரசுப் பேருந்துகள் திமுக மாநாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டதால், கோவையில் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
திமுக மகளிரணி சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பல்லடத்தில் மகளிரணி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
இதற்காக கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பெண்களை திமுக நிர்வாகிகள் பேருந்து மற்றும் வேன் உள்ளிட்ட வாடகை வாகனங்களில் அழைத்து வந்தனர்.
கோவையில் இருந்து போக்குவரத்துக் கழகத்தின் நகர மற்றும் விரைவுப் பேருந்துகள் மூலமாக பெண்கள் பல்லடம் மாநாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன் காரணமாக கோவை மாநகர் மற்றும் புறநகரில் பேருந்து சேவை தடைபட்டது. குறித்த நேரத்தில் பேருந்து வராததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
சில பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேருந்துகள் வராததால் நீண்ட நேரம் பேருந்து நிறுத்தத்தில் மக்கள் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சூலூரில் பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
எந்த ஒரு மாற்று ஏற்பாடுகளும் செய்யாமல் அரசுப் பேருந்துகளை மொத்தமாக அரசியல் கட்சி மாநாட்டிற்கு அனுப்பியதால் இந்த நிலை ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போதுமான பேருந்துகளை வைத்திருக்காமல், அவற்றை அரசியல் கட்சி மாநாட்டுப் பணிகளுக்கு எடுத்துச் சென்ற சம்பவம் கோவை மக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

