கோவை: கோவை ராம் நகர் பகுதியில் குளிர்பான கடையில் நுழைந்த திருடன் நிதானமாக திருடிவிட்டுச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ராம்நகர் பட்டேல் சாலையில் தினேஷ் என்பவருக்கு சொந்தமாக குளிர்பான மொத்த விற்பனை கடை உள்ளது.
இதனிடையே இரவு சுமார் 11 மணி அளவில் ஒரு மர்ம நபர் அங்கு வந்து உள்ளார். அப்போது ஷட்டர் பூட்டை உடைக்காமல், கள்ளச் சாவி பயன்படுத்தி உள்ளே சென்ற அந்த நபர் கடைக்குள் மின் விளக்கை போட்டால், சிக்கிக் கொள்வோம் என்பதால் கையில் இருந்த தீப்பெட்டியை பயன்படுத்தி தீக்குச்சிகளை பற்ற வைத்து அந்த வெளிச்சத்தில் ஒவ்வொரு மேஜையாக பணத்தைத் தேடியுள்ளார்.
மேலும், மேஜையில் அமர்ந்து நிதானமாக இரும்பு ட்ராயர்ஸ் ஒவ்வொன்றாக திறந்து பார்த்து உள்ளார்.
பின்னர், அங்கிருந்த சில்லறை பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்து தனது பின் பக்க பேண்ட் பாக்கெட்டில் திணித்துக் கொண்டு வெளியே செல்கிறார்.
காலை கடைக்கு வந்த தினேஷ் கடையின் ஷட்டர் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்களைக் கொண்டு கைரேகையை சேகரித்தனர்.
சில்லறை பணம் மட்டுமே காணாமல் போனாலும், கள்ளச் சாவி மூலம் பூட்டை உடைத்து திறந்து உள்ளே நுழைந்த விதம் அப்பகுதியில் மற்ற கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, இந்த திருட்டு சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

