கோவை: கோவை அருகே வாகன சோதனையில் ரூபாய் 1.18 கோடி மதிப்பிலான ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையாரில் காவல்துறையினர், காலல்துறை சோதனைச் சாவடிகள் உள்ளன. இந்த வழியாக போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தலை தடுக்க கேரளா போலீசார், மற்றும் காலால் துறையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வாளையார் காவல் ஆய்வாளர் ராஜுவ், உதவி ஆய்வாளர் பிரம்மோத் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சேலத்தில் இருந்து கொச்சி நோக்கி வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரில் பின்புறம் இருக்கைக்கு அடியில் கட்டு, கட்டாக பணம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து காரில் வந்த தம்பதியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில் அந்தப் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரிய வந்தது.
விசாரணையில் அவர்கள் மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த சவான் ரூபேஷ், அவரது மனைவி அர்ச்சனா ஆகியோர் என்பதும், சேலத்தில் வசித்து வரும் அவர்கள் அங்கு இருந்து கொச்சிக்கு ஹவாலா பணத்தை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், அதில் ரூபாய் ஒரு கோடியே 18 லட்சம் இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த தம்பதியை கைது செய்தனர். அந்த பணம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

