கோவை: குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் தேசியக்கொடி தயாரிப்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
ஜனவரி 26 ஆம் தேதி அன்று குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு குடியரசு தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உட்பட அனைத்து மத்திய மாநில அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.
அதுமட்டுமின்றி பல்வேறு பள்ளி கல்லூரிகளில் மாணவர்களின் குடியரசு தினம் விழா கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

குடியரசு தினத்தை முன்னிட்டு பலரும் புதிதாக தேசிய கொடிகளை வாங்குவார்கள் என்பதால் கோவையில் தேசிய கொடி தயாரிப்பு பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
டவுன்ஹால் பகுதியில் உள்ள காந்திஜி கதர் ஸ்டோரில் பல ஆண்டுகளாக தேசிய கொடிகள் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் கொடிகள் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
இங்கு பணிபுரியும் ராஜேந்திரன் என்பவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தேசியக்கொடிகளை தயாரித்து வருகிறார். இங்கு கதர் துணி, காட்டன் துணி, வெல்வெட் துணி என பல்வேறு துணி ரகங்களில் சிறியது முதல் பெரிய அளவு வரை தேசிய கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அது மட்டுமின்றி பேட்சுகள், ரிப்பன்கள், என பல வகை கொடிகளும் தயாரிக்கப்படுகிறது.

