கோவை: கோவைப்புதூரில் சாலையில் நடந்து சென்ற போது தொழிலாளி மீது பைக்கை மோதிவிட்டு கத்தியை காட்டி பணம் பறித்து தப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவைப்புதூர் அறிவொளி நகரை சேர்ந்தவர் ஏழுமலை (29). இவர் மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒர்க்ஷாப்பில் பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று மதியம் இவர் அறிவொளி நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அவரது பின்னால் பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், அவர் மீது மோதினார். அதில் ஏழுமலை நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
உடனே பைக்கை நிறுத்தி வந்த அந்த வாலிபர் திடீரென ஏழுமலையை சரமாரியாக தாக்கினார். பின்னர் அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.3200ஐ பறித்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஏழுமலை சத்தம் போட்டார்.
அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவர்களை மிரட்டி அங்கிருந்து தப்பி சென்றார்.
இதுகுறித்து ஏழுமலை குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஏழுமலையை பைக்கில் மோதி, தாக்கி பணத்தை பறித்தது சிவகங்கையை சேர்ந்த சதீஷ்வரன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

