கோவை: மருதமலை 184 அடி உயரத்திற்கு முருகன் சிலை அமைக்க சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி மறுத்துள்ளது.
கோவையின் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்றான மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.110 கோடியில் 184 அடி உயரத்திற்கு முருகன் சிலையை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
இதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த இடம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 137 மீட்டர் தொலைவுக்குள் உள்ளதால், அங்கு சிலை அமைப்பது வன விலங்குகளுக்கு இடையூறாக இருக்கும் என்று சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அனுமதி மறுப்பு
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
அதில், சிலை அமைக்கும் இடம் வனப்பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்கு உட்பட்ட பகுதிக்குள் வருவதால் அங்கு 184 அடி உயர சிலையை அமைக்க அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், முருகன் சிலையை வேறு இடத்தில் அமைப்பதற்கான யோசனையில் தமிழக அரசு இறங்கியுள்ளது.

