கோவை: வடவள்ளியில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 32). இவருக்கு பிரியங்கா (வயது 29) என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.
தினேஷ்குமார் தற்போது மனைவி பிரியங்கா உடன் வடவள்ளி அண்ணாநகர் பகுதியில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வருகிறார். நேற்று வடவள்ளி சி.எஸ்.நகர் அருகே உள்ள உறவினர்கள் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரியங்கா அவரது 3 குழந்தைகளுடன் கலந்து கொண்டார்.
நேற்று மதியம் குழந்தைகள் அனைவரும் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டு இருந்தனர்.
அப்போது பிரியங்காவின் ஒன்றரை வயது ஆண் குழந்தை ஆதி லிங்கேஸ்வரன் தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. யாரும் அதனை கவனிக்கவில்லை.
மூழ்கிய குழந்தை
இந்த நிலையில் திடீரென்று ஆதிலங்கேஸ்வரன் திறந்திருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துவிட்டான். விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் காணாமல் தேடிய பிரியங்கா குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அனைவரும் அவசர அவசரமாக குழந்தையை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை தண்ணீர் தொட்டியில் அதிக தண்ணீரைக் குடித்ததால் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பிரியங்கா வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திறந்திருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.