கோவை: கோழி தீவன உற்பத்தி ஆலையால் அவதிப்படுவதாக கூறி நரிக்குறவர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை மாவட்டம், பொள்ளாச்சி கொள்ளுப்பாளையம் நரிக்குறவர் காலணி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கோழித் தீவனம் உற்பத்தி ஆலை மற்றும் நிலப் பிரச்சனை காரணமாக அப்பகுதி பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருவதாகக் அப்பகுதி நரிக்குறவர் மக்கள் குழந்தைகளுடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதற்காக ஆட்சியர் அலுவலகம் வந்த அவர்கள் அவர்களது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை நுழைவு வாயில் போட்டு அமர்ந்ததனர் பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.
கோழித் தீவனம் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சு மற்றும் துர்நாற்றம் காரணமாக அப்பகுதி மக்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகவும், மஞ்சள் காமாலை நோய் தாக்கி சிலரும், ஆலை கழிவுப் புகையால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக சில குழந்தைகளும் உட்பட பலரும் உயிரிழந்துள்ளனர் என்றனர்.
தாங்கள் வாங்குவதற்காக முன்பதிவு செய்திருந்த இடம், ஆலை நிர்வாகத்தினரால் கைப்பற்றப்பட்டுவிட்டதாகவும், இதுகுறித்து கேட்டால் ஆலைத் தரப்பினர் தங்களை மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டினர். தங்குவதற்கு இடமின்றி சாலையோரமாகவே வசித்து வரும் அப்பகுதி மக்கள், மழை காலங்களிலும் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு உரிய நிலத்தை மீட்டுத் தரவும், ஆலை நிர்வாகத்திடமிருந்து பாதுகாப்பு வழங்கவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






