கோவை: அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 10 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் முதல்வர் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்தியதால் 10 மாத பெண் குழந்தை உயிரிழந்ததாகப் பெற்றோர் குற்றச்சாட்டிய நிலையில் தடுப்பூசிக்கும் இறப்புக்கும் தொடர்பில்லை என அரசு மருத்துவமனை முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த அந்தோணி – சரண்யா தம்பதியினரின் 10 மாத பெண் குழந்தை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்கு வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தியதைத் தொடர்ந்தே உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகப் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த 7-ஆம் தேதி குழந்தைக்கு வழக்கமாகச் செலுத்தப்படும் தடுப்பூசிகள் மற்றும் சொட்டு மருந்துகள் வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து 2 தினங்கள் கழித்து குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டதால், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாராசிட்டமால் மருந்து வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டதை அடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.
கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை குழந்தை உயிரிழந்தது.
குழந்தையின் உயிரிழப்புக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சையும் வழங்கப்பட்ட மருந்துகளுமே காரணம் எனப் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தங்களுக்குத் தெளிவான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும், குழந்தையைத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல விரும்பியபோதும் அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், குழந்தையின் சிகிச்சை ஆவணங்களைக் கேட்டபோதும் மருத்துவமனை நிர்வாகம் வழங்க மறுத்ததாகக் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து விளக்கம் அளித்த கோவை அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, குழந்தைக்குச் செலுத்த வேண்டிய தடுப்பூசிகள் அனைத்தும் முறையாகச் செலுத்தப்பட்டதாகவும், காய்ச்சல் ஏற்பட்டபோது வழக்கமான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
வலிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து குழந்தை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மூளைக்காய்ச்சல் இருக்கலாம் என்ற எண்ணத்தில் அதற்கான மருந்துகளும் வழங்கப்பட்டதாகவும் கூறினார். அன்றைய தினம் பல்வேறு இடங்களில் குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், வேறு இடங்களில் இதுபோன்ற பாதிப்புகள் பதிவாகவில்லை என்றும், குழந்தைக்கு ஏற்கனவே வைரஸ் காய்ச்சல் இருந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும், தடுப்பூசிக்கும் குழந்தையின் உயிரிழப்புக்கும் தொடர்பில்லை என்றும், குழந்தைக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலப் பாதிப்பே உயிரிழப்புக்குக் காரணம் என்றும் கூறினார். மேலும் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட அளவு மாத்திரைகளை பெறலாம் என்றும் முழு மாத்திரையாக தான் தரக்கூடாது என்று தெரிவித்தார்.






