கோவை: டிராக்டர், வேளாண் இயந்திர விபத்துகளைத் தடுக்க தேசிய விழிப்புணர்வு கூட்டத்தில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
டிராக்டர் மற்றும் வேளாண் இயந்திரங்களை இயக்கும்போது ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், இச்சிப்பாளையம் கிராமத்தில் தேசிய அளவிலான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பண்ணை இயந்திரவியல் மற்றும் சக்திப் பொறியியல் துறை சார்பில், அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ், மைராடா வேளாண் அறிவியல் மையத்துடன் இணைந்து கடந்த 14ஆம் தேதி இக்கூட்டம் நடத்தப்பட்டது.
இதில், டிராக்டர் மற்றும் வேளாண் இயந்திரங்களைப் பாதுகாப்பாக இயக்குவதற்கான வழிமுறைகள், இயந்திரங்களைக் கையாளும்போது பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், விவசாயிகளின் சந்தேகங்களுக்கு வேளாண்மைப் பொறியியல் துறை பேராசிரியர்கள் மற்றும் வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள் விளக்கமளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு, கொடுமுடி, சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பண்ணை இயந்திர ஓட்டுநர்கள் பங்கேற்றனர். வேளாண்மைப் பொறியியல் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் தியாகராஜன், உதவிப் பேராசிரியர் டாக்டர் தம்பிதுரை மற்றும் மைராடா வேளாண் அறிவியல் மைய வேளாண் துறை வல்லுநர் ஜான் பிரபாகர் உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக, விவசாய டிராக்டர்கள், டிரெய்லர்கள் மற்றும் மெதுவாகச் செல்லும் வாகனங்களின் பின்புறத்தில் ஒட்டுவதற்கான பிரதிபலிப்பு திறன் கொண்ட எச்சரிக்கைச் சின்னங்கள் டிராக்டர் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும், மஞ்சள் மற்றும் மரவள்ளி சாகுபடியில் இயந்திரமயமாக்கல் தொடர்பான தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.






