கோவை: கோவையில் மழைநிவாரணப் பணிகளில் 750 மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் களத்தில் உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, மழைநீர் தேங்கிய தாழ்வான பகுதிகளில் நீரை வெளியேற்றுதல், குடியிருப்புப் பகுதிகளைத் தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட நிவாரணப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் சுமார் 750 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா உத்தரவின்பேரில், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் நேரடியாகக் களத்தில் இறங்கி மழையால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்காணித்து வருகின்றனர். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்காமல் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவினாசி சாலை மேம்பாலம், லங்கா கார்னர் பாலம், கிக்கானி பள்ளி பாலம், காலீஸ்வரர் மில் பாலம், ஆவாரம்பாளையம் ரயில்வே பாலம், சிவானந்தா காலனி பாலம், நீலிக்கோணாம்பாளையம் ரயில்வே பாலம், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி ரயில்வே பாலம், இருகூர் சாலை மற்றும் பட்டணம் இடையேரி சாலை மேம்பாலங்களின் கீழ்ப்பகுதிகள், நெசவாளர் காலனி ரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி, சிங்காநல்லூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க சிறப்புக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மழைநீர் வெளியேற்றுவதற்காக 9 கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 10 மோட்டார் பம்புகள், 9 நீர்மூழ்கி மோட்டார்கள், 10 ஜெனரேட்டர்கள், 16 ஜே.சி.பி. இயந்திரங்கள், 7 பொக்லைன் இயந்திரங்கள், 7 பாப்கேட் இயந்திரங்கள், 25 டிப்பர் லாரிகள் மற்றும் 20 குடிநீர் லாரிகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், மரங்களை அகற்றும் இயந்திரங்கள், கொசு மருந்து தெளிக்கும் வாகனங்கள் மற்றும் மணல் மூட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவசரகாலப் பணிகளுக்காக மண்டல உதவி ஆணையாளர்கள் தலைமையில் ஏழு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மணியகாளியப்பன் வீதி, டெங்க் பேட் லேஅவுட், சபரி கார்டன், அன்பு நகர், நரிக்குறவர் காலனி, இந்திரா நகர், கோத்தாரி லேஅவுட், நாராயணசாமி லேஅவுட் மற்றும் அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அண்ணா நகர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், கிராமநாயக்கன்பாளையம் மாநகராட்சி சமுதாயக் கூடத்தில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவும் வழங்கப்பட்டது.
மழையால் கார் மீது விழுந்த மரத்தை மாநகராட்சிப் பணியாளர்கள் உடனடியாக அகற்றினர். காலீஸ்வரர் மில் பகுதியில் சுற்றுச்சுவர் சரிந்ததைத் தொடர்ந்து, ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றும் பணிகளும் சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. மாநகராட்சிக்கு உட்பட்ட 11 சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற 29 உயர் குதிரைத்திறன் கொண்ட மோட்டார்கள் மற்றும் மூன்று ஜெனரேட்டர் செட்கள் பயன்படுத்தப்பட்டன.
மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இரவு, பகலாகத் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றுதல், குடியிருப்புப் பகுதிகளைத் தூய்மைப்படுத்துதல், விழுந்த மரங்களை அகற்றுதல் மற்றும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடம், உணவு வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூலம் மாநகராட்சிப் பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் தொடர்புடைய அலுவலர்களுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மழைநீர் தேங்குதல் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் 8190000200 என்ற தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.






