கோவை: பவர்ஹவுஸ் பகுதியில் உள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோரில் மளிகைப் பொருட்களை வாங்கிவிட்டு, ஜிபே மூலம் பணம் செலுத்தியதாகக் கூறி ஏமாற்ற முயன்றதாகப் பெண் ஒருவரை ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கோவை சிவானந்தா காலனியைச் சேர்ந்த வாசகி என்ற பெண், நேற்று மாலை அந்தக் கடையில் ரூ.200 மதிப்பிலான மளிகைப் பொருட்களை வாங்கியுள்ளார். அப்போது, ஜிபே மூலம் பணம் செலுத்திவிட்டதாகக் கூறிவிட்டுச் சென்றதாகக் கடைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று இரவு சுமார் 7 மணியளவில் மீண்டும் அதே கடைக்கு வந்த அவர், சுமார் ரூ.2,500 மதிப்பிலான பொருட்களை வாங்கியுள்ளார். இந்த முறையும் ஜிபே மூலம் பணம் செலுத்திவிட்டதாகக் கூறிவிட்டுப் புறப்பட முயன்றதாகத் தெரிகிறது.
கடையின் கணக்கைப் பரிசோதித்த ஊழியர்கள், பணம் வரவு வைக்கப்படாததைக் கண்டனர். இதையடுத்து, அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று, அருகிலுள்ள பழமுதிர் நிலையம் அருகே பிடித்தனர்.
இதுகுறித்து ரத்தினபுரி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்தப் பெண்ணைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின்போது, ஆந்திராவில் உள்ள ‘குளோபல் சட்டக் கல்லூரியில்’ படிப்பதாகவும், வழக்கறிஞர் என்றும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் முன்பகுதியிலும் ‘ADVOCATE’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.
ஆனால், முதற்கட்ட விசாரணையில் அவர் சட்டப்படிப்பு படிக்கவில்லை என்பதும், வழக்கறிஞர் எனக் கூறியதும் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண் வேறு கடைகளிலும் இதேபோன்று பணம் செலுத்தியதாகக் கூறிப் பொருட்களை வாங்கிச் சென்றுள்ளாரா என்பது குறித்து ரத்தினபுரி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






