கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர், இயந்திரத்தைத் திறக்க முடியாததால் பணத்தைத் திருடாமல் அங்கிருந்து சென்றார். சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்தும் அட்டைப் பெட்டியால் மூடியும் அவர் செயல்பட்ட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
கோவில்பாளையம்–சர்க்கார் சாமக்குளம் சாலையில் தனியார் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு ரெயின்கோட், முகமூடி மற்றும் கையுறைகள் அணிந்து வந்த மர்ம நபர், ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணத்தைத் திருட முயன்றுள்ளார்.
முன்னதாக, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மீது ஸ்ப்ரே அடித்த அவர், பின்னர் அங்கிருந்த அட்டைப் பெட்டியைக் கொண்டு கேமராவை மறைத்துள்ளார். தொடர்ந்து, ஏடிஎம் இயந்திரத்தைத் திறக்க முயன்றுள்ளார். ஆனால், இயந்திரத்தைத் திறக்க முடியாததால் பணத்தைத் திருடாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதையடுத்து, காலையில் ஏடிஎம் மையத்திற்கு வந்த பாதுகாவலர்கள், இயந்திரம் சேதப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டு சம்பந்தப்பட்ட வங்கிக்குத் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து வங்கி நிர்வாகம் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது.
புகாரின் அடிப்படையில், போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிசிடிவி கேமராவை மறைத்து ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயன்ற காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.






