கோவை: கோவையில் கிராமப்புற ஏழை மக்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திற்கு நவ.15 முதல் விண்ணப்பிக்கலாம்.
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கோவை மாவட்டத்தில் கிராமப்புற ஏழை மகளிருக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற மக்களின் வருமானத்தை உயர்த்தவும் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, 2026-2027 ஆம் ஆண்டில் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் 18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களாகவும், கறவை மாடுகளை வளர்த்து பராமரிப்பதற்கான போதிய இடவசதி மற்றும் தீவன வசதி கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
ஏற்கனவே இதேபோன்ற அரசு திட்டங்களில் பயனடைந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. மேலும், விண்ணப்பதாரரின் குடும்பத்தினர் ஏற்கனவே கறவை மாடுகளை சொந்தமாக வைத்திருக்கக் கூடாது.
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் குறைந்தபட்சம் 40 சதவீத பாதிப்பு கொண்ட UDID சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் குடும்பத்தினர் 2.5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கக் கூடாது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மேலும், இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ், வங்கிக் கணக்கு விவரம், புகைப்படம், தேவையான பிற சான்றிதழ்கள் மற்றும் உறுப்பினராக உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தகுதியானவர்கள் நவம்பர் 15-ம் தேதி முதல் டிசம்பர் 5-ம் தேதி வரை அரசால் அறிவிக்கப்பட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைகளை அணுகலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், தெரிவித்துள்ளார்.





