கோவை: கோவை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்தும் நோக்கில், கல்லூரி சந்தை நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மகளிர் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்படும் பொருட்களைச் சந்தைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள கல்லூரிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கல்லூரி சந்தை நடைபெற உள்ளது.
அதன்படி, கோவை ஜி.என். மில்ஸ் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நவம்பர் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரையும், கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் நவம்பர் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையும் கல்லூரி சந்தை நடைபெறுகிறது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்தச் சந்தையில் 40-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று, தாங்கள் தயாரித்த கைவினைப் பொருட்கள், ஆயத்த ஆடைகள், மூலிகைப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், சிறுதானியப் பண்டங்கள், எண்ணெய் வகைகள் மற்றும் நெய் உள்ளிட்ட பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்ய உள்ளனர்.
மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை பொதுமக்கள் வாங்கிப் பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.


