கோவை: கோவை பீளமேடு அடுத்த ஆவாரம்பாளையம் அருகே ரயில் கடக்கும் போது தண்டவாளத்தில் கற்கள் வீசியதாக ஐந்து இளைஞர்கள் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்…..
கோவை, பீளமேடு அடுத்த ஆவாரம்பாளையம் அருகே சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் பொழுது அங்கு இருந்த சில இளைஞர்கள் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும் தண்டவாளத்தில் சிறு, சிறு கற்களையும் வைத்து உள்ளனர்.
இதனைக் கண்ட ரயிலில் பாதுகாப்பிற்காக சென்ற ரயில்வே காவலர் ஒருவர் உடனடியாக கோவை ரயில் நிலைய இருப்பு பாதை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து உள்ளார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது ஆவாரம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பார்சல் நிறுவனத்தில் பகுதி நேரம் பணியாற்றும் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட தினேஷ் கரண் ,ஜெகதீசன், சாரதி, பிரதாப் மற்றும் ஒரு சிறுவன் உள்ளிட்ட ஐந்து இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் 15 நாள் காவலில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.