Header Top Ad
Header Top Ad

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு- உரிமை கொண்டாட அதிமுகவிற்கு தகுதியில்லை…

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் வெற்றிக்கு உரிமை கொண்டாட அதிமுகவுக்கு தகுதியில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சாடியுள்ளார்…

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாகவும், இந்த தீர்ப்பில் அதிமுகவுக்கு உரிமை கொண்டாட தகுதி இல்லை எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.

கோவை தண்ணீர் பந்தல் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘தீக்கதிர்’ அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெ.சண்முகம், புதிய அலுவலக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் கட்சி நிர்வாகிகள் அளித்த நன்கொடையைப் பெற்றுக்கொண்ட அவர், நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பை வரவேற்பதாகக் கூறிய பெ.சண்முகம், “வாசாத்தி, சிதம்பரம் பத்மினி பாலியல் விவகாரங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி தீர்வு கண்டுள்ளது. ஆனால், பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளைப் பாதுகாக்கவும், குற்றத்தை மறைக்கவும் அதிமுக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியது. அதிமுக ஆட்சியில் குற்றவாளிகள் சுதந்திரமாக உலவினர். மக்கள் போராட்டத்தால் மட்டுமே இவ்வழக்கு மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிடவில்லை. இந்தத் தீர்ப்புக்கு அதிமுக உரிமை கோருவது கண்டனத்திற்குரியது,” என்றார்.

Advertisement

மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் 85 லட்சம் ரூபாய் இழப்பீடு குறைவு எனவும், அதனை உயர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். “பாதிக்கப்பட்ட பெண்களுக்கோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கோ அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வழக்கிற்காகப் போராடிய இயக்கங்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்,” என்றார்.

மத்திய பாஜக அரசு வகுப்புவாத அரசியல் செய்வதாகவும், பஹல்காம் தாக்குதல் உதாரணம் என்றும் குற்றம்சாட்டினார். “பிரதமர் வெளிநாட்டிலிருந்து திரும்பியும் சம்பவ இடத்திற்குச் செல்லவில்லை. தமிழ்நாட்டில் நிரந்தர அரசு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. காலி பணியிடங்கள் குறைந்த ஊதியத்தில் நிரப்பப்படுகின்றன. பஞ்சமி நிலங்கள் மீட்கப்படவில்லை,” என்று கூறினார்.

மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 11 முதல் 20 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபயணப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார். பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மத்திய அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்டித்த அவர், “247 கி.மீ. இந்தியாவிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திவிட்டு தீவிரவாதிகள் திரும்பிச் சென்றுள்ளனர். இதற்கு மத்திய பாஜக அரசு பொறுப்பேற்க வேண்டும். யுத்த அறிவிப்பு வெளியானபோது, அமெரிக்க அதிபர் டிரம்ப் யுத்தத்தை நிறுத்திவிட்டதாகக் கூறினார். இந்தியப் பிரதமராக டிரம்பை மாற்றிவிட்டார்களா என்று மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இவ்விவகாரத்தில் உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்த பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும்,” என்று தெரிவித்தார்.

Recent News