கோவை: கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டி முறையாக ஒருங்கிணைக்கப்படவில்லை என்று பெற்றோர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
கோவை பிரைம் ஸ்போர்ட்ஸ் அமைப்பு சார்பில் மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கு இடையேயான நீச்சல் போட்டி கோவை கே.என்.ஜி புதூர் பகுதியில் உள்ள லைஃப் ஸ்ப்ரிங் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
வெவேறு வயதினருக்கு 25 மீட்டர், 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற போட்டியில் இருபாலரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதனிடையே போட்டி முறையாக ஒருங்கிணைக்கப்படவில்லை என்றும், குழந்தைகள் அவதியடைந்ததாகவும் பெற்றோர் ஆதங்கத்தைத் தெரிவித்தனர்.
குழந்தைகள் அவதி
இதுகுறித்து போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகளின் பெற்றோர் கூறுகையில்,
“போட்டி காலை 6 மணி முதலே தொடங்கும் என்று அறிவித்தனர். அதன்படி பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் அங்கு சென்றனர்.
ஆனால் குறித்த நேரத்தில் போட்டி தொடங்கவில்லை. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர்களிடம் கேட்டபோதும் முறையான பதில் கிடைக்கவில்லை.
காலை 6 மணிக்கு சிறு குழந்தைகளுடன் சென்ற பெற்றோர் இரவு 8 மணி வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் குழந்தைகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
குழந்தைகளுக்கான போட்டி முதலில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், முறையான ஒருங்கிணைப்பு இல்லாமல் குழந்தைகள் காக்கவைக்கப்பட்டனர். சிலர் போட்டிகளில் பங்கேற்காமலேயே திரும்பிச்செல்லும் நிலையும் ஏற்பட்டது. இனி வரும் காலங்களில் குழந்தைகள் நலனனை கருத்தில் கொண்டு போட்டிகள் முறையாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.” என்றனர்.
Comments are closed.