கோவை: மேட்டுப்பாளையத்தில் இ.பி.எஸ் தலைமையில் நடைபெற்ற அதிமுக.,வின் முதல் நாள் தேர்தல் பிரச்சாரத்தின் போது ரூ.2 லட்சம் பிக்பாக்கெட் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியிலிருந்து இன்று தொடங்கினார்.
மேட்டுப்பாளையத்தில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தி தனது சுற்றுப்பயணத்தை இன்று காலை தொடங்கியுள்ளார்.
எந்த ஒரு புதிய தொடக்கமாக இருந்தாலும் வன பத்ரகாளியம்மன் கோவிலிலிருந்து தொடங்கினால் கைகூடும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. அதன்படியே, இந்த கோவிலிலிருந்து இபிஎஸ் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
இதற்காக காலை 9 மணி முதலே கோவிலுக்கு பக்தர்களும், அ.தி.மு.க.,வினரும் சாரை சாரையாக வரத் தொடங்கினர்.
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், பா.வளர்மதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ்.எம்.ஆனந்தன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன், சிங்கை எம்.எல்.ஏ ஜெயராமன், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ ஏ.கே.சின்ராஜ், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார், சூலூர் எம்.எல்.ஏ கந்தசாமி, மாணவர் அணித் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் உள்ளிட்டோர் இந்த பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.
பிக்பாக்கெட்
அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அதிமுக மேட்டுப்பாளையம் நிர்வாகி தேவராஜ் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.ஒரு லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
இதேபோன்று நிர்வாகிகள் மூவரிடம் மொத்தம் ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.