கோவை: கணபதியில் வீட்டிற்குள் மெகா சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 36,600ஐ பறிமுதல் செய்தனர்.
கோவை ரத்தினபுரி போலீசாருக்கு கணபதியில் ஒரு வீட்டில் மெகா சூதாட்டம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கணபதி விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஒரு கும்பல் பணத்தை வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.
அவர்களை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
விசாரணையில் அவர்கள் ரத்தினபுரியை சேர்ந்த அலாவுதீன் (51), சம்சுகனி (45), ரபிக் ராஜா (45), முகமது இஸ்மாயில் (39), முகமது அரிப் (32), சம்சுதீன் (33), ஜாகீர் உசைன் (39), போத்தனூரை சேர்ந்த சாகுல் அமீது (35) ஆகியோர் என்பது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவர்கள் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சீட்டு கட்டு மற்றும் ரூ. 36 ஆயிரத்து 600ஐ பறிமுதல் செய்தனர்.