கோவை: கோவை விமான நிலையத்தில் 36.81 லட்சம் மதிப்பு உள்ள செல்போன்கள், லேப்டாப்கள், வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொழில் நகரமான கோவைக்கு பணி நிமித்தம் காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக் கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதில், தென் மாவட்டங்களுக்கு இருந்து விமான சேவை இல்லாததால், தென் மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் கோவை விமான நிலையம் வந்து செல்வது வழக்கமாகும்.
அதே போல், இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள் கோவை வழியாக மீண்டும் நாடு திரும்புவதும் வழக்கமாகும்.
அவ்வாறு சர்வதேச நாடுகளில் இருந்து வரும் பயணிகள், தங்கம், அரிய வகை விலங்குகள், பறவைகள், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் உள்ளிட்டவைகளை கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இதனால், சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு போலீசார் அவ்வப்போது விமான நிலையத்தில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சார்ஜாவிலிருந்து இன்று காலை கோவைக்கு வந்த பயணிகளிடம் சுங்க இலக்காத் துறை அதிகாரிகள் உடைமைகள் மற்றும் சோதனைகளில் ஈடுபட்டனர்.
அப்போது திருவாரூரை சேர்ந்த தருண் சேகரன், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சையது அமானுல்லா சுல்தான், பிறத்தியுனன் கெங்கமுத்து, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த யாசர் அராபத் அப்துல் ஜப்பார், பைசல் அகமது முகமது யூசுப், திருநெல்வேலி சேர்ந்த அஜ்மீர் காஜா மைதீன் மற்றும் சென்னையைச் சேர்ந்த மன்சூர் கான் பாபு ஆகிய 7 பயணிகளிடம் நடத்திய சோதனையில் 1,461 பெட்டிகள் சிகரெட்கள், 213 மின் சிகரெட்கள், 12 ரீப்ர்பிஷ் செய்யப்பட்ட செல்போன்கள் மற்றும் 8 லேப்டாப்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.36.81 லட்சம் என மதிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இது குறித்து அவர்களிடம் சுங்க இலாக்காத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.