கோவை: அணில்கள் அரசியல் படிக்க வேண்டும் என்றும் விஜய்க்கு அரசியல் ஒட்டவில்லை என்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார்.
இதனிடையே பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் எ.பி.முருகானந்தம் விஜயின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-
அணில்கள் அரசியல் படிக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமென்றாலும் கட்சி ஆரம்பிக்கலாம். நண்பர் விஜய்க்கு வாழ்த்துக்கள். ஒரு கட்சி ஆரம்பிப்பது முக்கியமில்லை. அரசியலே தெரியாமல் அரைவேக்காடு தனமாகப் பேசுவதுதான் தவறு.
மாநாட்டில் “கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள்,
நீட் தேர்வே தேவையில்லை என அறிவித்துவிடுங்கள்” என்று வீர வசனம் பேசும் விஜய்க்கு அந்த திட்டங்கள் யார் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

கச்சத்தீவைத் தாரைவார்த்துக் கொடுத்தது யார் என்பதும் யாரைக் கண்டனம் செய்யவேண்டும் என்ற அடிப்படை புரிதலே இல்லாதது ஆச்சரியம்.
“தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது. அப்படியிருக்கையில் தமிழக மக்கள் மட்டும், எப்படி ஒட்டுவார்கள்” என்று சொல்லும் விஜய்க்கு உங்களுக்கும் அரசியலுக்கும் தான் ஒட்டவில்லை என்பதை யாரவது எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கவேண்டும். பாஜகவை எதிர்த்துப் பேசினால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்று நீங்கள் கணக்குப் போடுவது வெறும் கானல் நீர் கணக்கு மட்டுமே.
தமிழக மக்கள் என்றோ பாஜகவை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு எங்கள் கட்சியினரும் சட்டமன்றத்துக்குச் சென்றுவிட்டார்கள். சிறுபான்மையினர் வாக்குகளைக் கவர இஸ்லாமியர்களின் எதிரிகள் போல எங்களைச் சித்தரிப்பது கண்டனத்துக்குரியது.
“தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்காகவும் எதுவும் செய்யாமல் ஓரவஞ்சனை செய்கிறது இன்றைய ஒன்றிய பாஜக அரசு” என்று நீங்கள் பேசுவதில் உங்கள் அறியாமை அப்பட்டமாக வெளிப்படுகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சில வற்றைப் பட்டியலிடுகிறேன் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
வரி பகிர்வில் 2.88 லட்சம் கோடி, grants-in-aid 2.58 லட்சம் கோடி,
PM Awas Yojana திட்டத்தில் 20,000 கோடி மதிப்பில் 15 லட்சம் வீடுகள்
PM SVANidhi திட்டத்தில் 670 கோடி ரூபாய் மத்தியில் ஐந்து லட்சம் வணிகர்களுக்கு நிதி உதவி
PM Kisan திட்டத்தில் 46-லட்சம் விவசாயிகளுக்கு 11,000 கோடி ரூபாய் நிதி உதவி
Jal Jeevan Mission திட்டத்தில் ஒரு கோடி தமிழக வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள்
ரயில்வே திட்டங்களுக்கு 6,000 கோடி ரூபாய்
Mahatma Gandhi NREGA திட்டத்துக்கு 13,392.89 கோடி
இதுபோக PM Jan Dhan, PM BIMA, Smart Cities, Jal Jeevan Mission, Antyodaya Anna Yojana மேலும் நெடுஞ்சாலை திட்டங்கள் என்று தமிழ்நாட்டுக்குப் பாரத பிரதமர் மோடி தலைமையிலான அரசு தோராயமாக 11 லட்சம் கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது.
திரைத்துறையிலிருந்து மக்கள் பணி செய்ய அரசியலுக்கு வருவது மட்டும் முக்கியமில்லை. முதலில் நீங்கள் அரசியல் படிக்க வேண்டும். இது ஒன்றும் சினிமா சூட்டிங் கிடையாது.
யாரோ எழுதிக்கொடுத்த அறிக்கையை நீட்டி முழக்கி மேடையில் பேசினால் உங்கள் ரசிகர்கள் ரசிப்பார்கள். அது அரசியலுக்கு கிஞ்சிற்றும் பயன்தராது. முதலில் ஒரு மாநாடு நடத்துவது எதற்காக என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
தீர்மானங்கள் கொண்டுவரவே ஒவ்வொரு பெயர்களில் மாநாடுகள் நடத்தப்படும். தீர்மானங்களையே வாசிக்காமல் மாநாட்டை முடித்துவிட்டு பின்புறம் காரை எடுத்து ஓடிய நீங்கள் அரசியல் கட்சி எப்படிச் செயல்படவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். உங்களைக் காண வெயிலில் காத்துக் கிடந்த தொண்டர்களை ஏதோ சமூக விரோதிகளைப் போல உங்களுடன் இருந்த தனியார் பாதுகாவலர்கள் கழுத்தைப் பிடித்துத் தடுத்து நிறுத்துவதும், அடித்து கீழே தள்ளுவதையும் பார்த்து அவர்களின் செயல்பாடுகளைத் தடுக்கக் கூட தவறிய நீங்களா மக்களைப் பாதுகாக்கப் போகிறீர்கள்.
அடுத்தவர்களைக் குறைசொல்லி வளருவதெல்லாம் பின்னர் பார்த்துக்கொள்ளலாம். முதலில் உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது. உங்கள் கட்சியில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
பாஜகவைக் குறை சொல்லவும், பாரத பிரதமரைக் குறை சொல்லவும் உங்கள் தகுதிகளை வளர்த்துக்கொள்ளுங்கள். அதற்கு ஒரு அரசியல் கட்சியின் தலைவராக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அணிகள் அரசியல் படிக்க வேண்டும்.
இவ்வாறு ஏ.பி.முருகானந்தம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.