கோவை: கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் தங்கும் அறைகளில் அதிகாலை முதல் ஒரே நேரத்தில் எஸ்பி தலைமையில் 410 போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த சுதந்திர தினத்தை ஒட்டி போலீசார் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தபோது, செட்டிபாளையம் பகுதியில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் கஞ்சா பொருட்களுடன் 3 வாலிபர்கள் பிடிபட்டனர்.
மதுரையைச் சேர்ந்த அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா புழக்கத்தில் விட்டு வந்ததும், அதில் ஏற்பட்ட பிரச்சனையில் ஒரு மாணவரை தாக்குவதற்கு வந்ததும் தெரிய வந்தது.
ஏற்கனவே கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள், ஆயுதங்கள் புழங்குவதை தடுக்க, போலீசார் அவர்கள் தங்கியுள்ள அறைகளில் அவ்வப்போது சோதனை நடத்தி வந்த நிலையில் இந்த சம்பவம் நடந்தது மீண்டும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து தென் மாவட்டங்களில் இருந்து ஒரு கும்பல் புகுந்து இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.
இடைத்தொடர்ந்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மீண்டும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா நடமாட்டத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்படி இன்று அதிகாலை 5 மணி முதல் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் பேரூர் போலீஸ் எஸ்பி தலைமையில் கோவில்பாளையம், செட்டிபாளையம், மதுக்கரை ஆகிய பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ள இடங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இதற்கு மாவட்டம் முழுதும் 90 குழுவினர் அமைக்கப்பட்டு 412 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பொறியியல், கலைக் கல்லூரிகள் பாலிடெக்னிக்கல் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்கள் அந்த கல்லூரிகள் சார்பில் நடத்தப்படும் விடுதிகளில் இடம் கிடைக்காததால் வெளியில் வீடுகள் மற்றும் காம்ப்ளக்ஸ்கள், தனியார் நடத்தும் விடுதிகள் ஆகிய இடங்களில் வங்கி படித்து வருகிறார்கள்.
இவர்களில் சில மாணவர்கள் தவறான பழக்கவழக்கங்கள் மற்றும் தவறான நபர்களுடன் தொடர்பு ஆகியவற்றின் மூலம் தவறான பாதையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்காக கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை பொருட்களை விற்பதற்காக ஒரு கும்பல் ஊடுருவி அவர்களுடன் தங்கி இருந்து வருவது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இன்று காலை நடைபெற்ற சோதனையில் போலீஸ் எஸ்பி கார்த்திகேயன் நேரடியாக செட்டிபாளையம் பகுதியில் போலீசாருடன் மாணவர்கள் அறையில் சோதனை நடத்தினார்.
அப்போது அவர்கள் தங்கி இருந்த அறையில் ஒவ்வொரு பகுதியாக நுழைந்து போலீசார் சோதனை செய்தனர்.
அவர்கள் வைத்திருக்கும் பெட்டிகள், உடைமைகள், வாகனங்கள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என அனைத்தும் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்கள் உரிய ஆவணங்கள் உடன் பயன்படுத்தப்படுகிறதா,? மாணவர்கள் அடையாள அட்டை மற்றும் மற்ற விவரங்களையும் போலீசார் அப்போது விசாரணையில் கேட்டனர்.
காலை 5 மணிக்கு தொடங்கிய போலீசாரின் அதிரடி சோதனை 10 மணி தாண்டி நடந்தது. இந்த ஐந்து மணி நேர சோதனையில் சில இடங்களில் போதை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் போலீஸ் சோதனைகள் சிக்கியுள்ளன.
இது தொடர்பாக போலீசார் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் இன்று காலை அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.