கோவை: தெரு நாய்களுக்கு ஆதரவாக கோவையில் நாய்கள் ஆர்வலரகள் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.
நாடு முழுவதும் தெரு நாய் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் பொதுமக்களையும் குழந்தைகளையும் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் உச்ச நீதிமன்றம் தெரு நாய்களை பிடிக்க வேண்டும் பிடிக்கப்படும் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் கருத்தடை செய்யவேண்டும் பின்னர் அவற்றை எங்கு பிடித்தார்களோ அங்கேயே விட்டு விட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் கோவையில் நாய்கள் ஆர்வலர்கள் ரேஸ் கோர்ஸ் பகுதியில் பேரணி மேற்கொண்டனர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஒரு கலந்து கொண்டு தெருநாய்களை பாதுகாக்க வேண்டும், அவற்றுக்கு முறையான உணவு அளிக்க வேண்டும், உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியவாறு பேரணி மேற்கொண்டனர்.
பேரணியில் நீதிமன்றம் கூறிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், கட்டாயமாக தடுப்பூசி செலுத்த வேண்டும், கருத்தடை செய்ய வேண்டும், இணக்கமான வாழ்வே இதற்கான தீர்வு என்பதை வலியுறுத்தப்பட்டது.

இது குறித்து பேட்டி அளித்த ஆர்வலர்கள் ரேபிஸ் தொடர்பான பிரச்சனை என்றால் எங்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர். ரேபிஸ் தடுப்பூசி என்பது நாய்கள் மட்டுமல்லாமல் பூனைகள் எலிகள் ஆகியவை கடித்தாலும் செலுத்தப்படக்கூடிய ஒன்று என்றும் அப்படி இருக்கும் பொழுது ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினாலே நாய் கடி தான் என்று எடுத்துக் கொள்ள முடியாது என குறிப்பிட்டனர்.
வீட்டில் நாய்களை வளர்ப்பவர்கள் பலர் நாய்களுக்கு கருத்தடை செய்யாமல் வைத்திருப்பதாகவும் எனவே அதற்குரிய காலம் வரும் பொழுது அது சற்று முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாகவும் அப்பொழுது வீட்டு நாய் கடித்தாலும் அவை அனைத்தும் தெருநாய்கள் தான் என்று பொதுவான குற்றச்சாட்டு முன் வைக்கப்படுவதாக தெரிவித்தனர். மேலும் நாய்க்கடி என்றால் அது வீட்டு நாயா? அல்லது தெருவில் இருக்கும் நாய்களா? என்ற விவரங்களை அரசாங்கம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.