கோவை: சுந்தராபுரம் பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத சூழலில் ஏற்பட்டுள்ளதாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் சுந்தராபுரம் சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிக்னல் அப்புறப்படுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
சிக்னலை அப்புறப்படுத்தியதனால் அங்கு சாலைகளில் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் பள்ளிக் குழந்தைகள்,பொதுமக்கள் மற்றும் அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல மதுக்கரைக்கு சாலைக்கு செல்ல முடியாமலும் ஒரு கிலோ மீட்டர் சென்று U-Turn எடுத்து வருவதனால் அதிகளவில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அந்த பகுதியில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனையில் இருப்பதினால் அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் செல்ல முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
அது மட்டும் இல்லாமல் இதனால் சாலை கடக்க முடியாமல் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதியை சார்ந்தவர்கள் குற்றம் சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.