கோவை: வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் வளாகத்திற்குள் யானைகள் நுழைவதைத் தடுக்கும் விதமாக ஆலோசனைகளை மேற்கொண்ட அதிகாரிகள், பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம், பூண்டியில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில் வளாகத்திற்குள் காட்டு யானைகள் அடிக்கடி நுழைந்து திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அச்சுறுத்தலை எற்படுத்தி வருகிறது.
இதனிடையே கடந்த 2ம் தேதி மாலை ஒற்றைக் காட்டு யானை ஒன்று திருக்கோயில் முன் மண்டபத்திற்குள் நுழைந்து பக்தர்களை பயமுறுத்தியும். திருக்கோயில் கட்டணச்சீட்டு விற்பனை அறை, அணையா விளக்கு மற்றும் சிவன் சன்னதி எதிர்புறம் உள்ள பாதுகாப்பு கிரில்கேட் ஆகியவற்றை சேதப்படுத்தியும் சென்றது.
அந்த வீடியோ காட்சிகள்
இதில் நல்வாய்ப்பாக பக்தர்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை, இந்த நிலையில், அறநிலையத்துறையின் கோவை இணை ஆணையர் தலைமையில், கோவில் அறங்காவலர்கள் மற்றும் போலாம்பட்டி வனச்சரக அலுவலர் ஆகியோரின் முன்னிலையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தற்காலிக ஏற்பாடாக உடனடியாக திருக்கோவிலின் முன் மண்டபத்திற்கு முன்புறம் படிகள் அமைந்துள்ள இடத்தில் பாதுகாப்பு கம்பிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
மேலும், கோவில் வளாகத்தில் அடிக்கடி காட்டு யானைகள் நுழைவதை தடுக்கும் வகையில் திருக்கோவில் வளாகத்தைச் சுற்றிலும் முழுமையாக சுற்றுச்சுவர் கட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அச்சம் தணிந்து கோவிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.