கோவை: அரசு நிதி உதவி வழங்கிட வேண்டுமென ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்டோவிற்கு மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது. எனவே மீட்டர் கட்டணத்தை உயர்த்திட வேண்டுமென ஆட்டோ ஓட்டுநர்களும் பல ஆண்டுகளாக கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இதனிடையே தனியார் ஆன்லைன் வாடகை வாகனங்களால் தங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் ஆந்திர அரசாங்கம் நலிவடைந்த ஆட்டோ ஓட்டுநர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஆட்டோ டிரைவர் சேவை என்ற திட்டத்தின் மூலம் 15 ஆயிரம் ரூபாய் வழங்கி வரும் நிலையில் தமிழக அரசும் அதே போன்ற நிதி உதவியை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவை மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு பரிசீலிக்க வேண்டும் என்றும் தங்களது கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.