கோவை: நாய்கள் குரைத்ததால் வெளியில் வந்தவரை நெருங்கி வந்த காட்டு யானை, நூலிழையில் தப்பிய நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் குறிப்பாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிக அளவு உள்ளது.
அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களையும் ரேஷன் கடைகளிலும் வைக்கப்பட்டுள்ள அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை தின்று செல்கிறது.
வனத்துறையினரும் காட்டு யானைகள் ஊருக்குள் புகாத வண்ணம் ரோந்து பணிகளை மேற்கொண்டாலும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை பன்னிமடை அடுத்த திப்பனூர் ஊருக்குள் தெருக்களில் உலாவி வந்துள்ளது. அப்பொழுது நாய்கள் குரைத்ததால் முத்து என்பவர் வீட்டிலிருந்து வெளியே வந்து அவரது கேட்டின் சிறிய கண்ணாடி துளை வழியே பார்த்துள்ளார் அப்பொழுது யானை தும்பிக்கையை நீட்டிய வண்ணம் நெருங்கி வந்துள்ளது.
யானை நெருங்கி வருவதை பார்த்து அச்சம் அடைந்த அவர் கேட்டை தட்டி சத்தம் எழுப்பியுள்ளார். அதனை தொடர்ந்து அந்த ஒற்றை காட்டுயானை அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளது. பின்னர் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
அடிக்கடி காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதால் இரவு நேரங்களில் வெளியில் வருவதற்கு அச்சமாக இருப்பதாகவும் எனவே யானைகள் காட்டு விலங்குகள் ஆகியவை ஊருக்குள் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் விவசாயிகளும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

