கோவையில் கணவன் உயிரிழந்தது தெரியாமல் 6 நாட்கள் குடும்பம் நடத்திய பெண்!

கோவை: கோவையில் கணவன் இறந்தது கிடந்தது தெரியாமல், அவரது சடலத்துடன் மனைவி 6 நாட்கள் வசித்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, உக்கடத்தை அடுத்த கோட்டைப் புதூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் அப்துல் ஜபார் (48). இவரது மனைவி மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

Advertisement

இந்த தம்பதிக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவரும் தங்கள் பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். அவ்வப்போது தங்கள் வீட்டிற்கு வந்து தாய் தந்தையைப் பார்த்துச் செல்வது வழக்கம்.

இதனிடையே அப்துல் ஜபாரின் மகனுக்கு அப்பகுதி மக்கள் செல்போனில் அழைத்து, உங்கள் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகத் தெரிவித்தனர்.

தொடர்ந்து அவர் வீட்டிற்குச் சென்று பார்த்த போது அப்துல் ஜபார் தனது படுக்கை அறையில் படுத்த நிலையில் இருந்துள்ளார்.

எலி இறந்திருக்கலாம்!

பின்னர் தனது தாயிடம், வீட்டில் துர்நாற்றம் வீசுகிறதே என்று கேட்க, எலி இறந்திருக்கலாம் என்று அப்துல் ஜபாரின் மனைவி தெரிவித்துள்ளார்.

Advertisement

தந்தை ஜபார் தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்த மகனும் அங்கிருந்து சென்றுவிட்டார். மறுநாள் துர்நாற்றம் அதிகமாக வீச, மீண்டும் அப்பகுதி மக்கள் ஜபாரின் மகனுக்குத் தகவல் தெரிவித்தனர்.

மீண்டும் அவர் வீட்டிற்கு வந்த போது தான் தனது தந்தை கடந்த 6 நாட்களுக்கு மேலாக சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.

சம்பவம் குறித்து தகவலறிந்த பெரிய கடைவீதி போலீசார் ஜபார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவன் இறந்தது தெரியாமல், அவரது சடலத்துடன் மனைவி 6 நாட்கள் இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Recent News