கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி- கோவை எல்லையில் சோதனைகள் தீவிரம்…

கோவை: கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக கோவை சோதனை சாவடியில் தடுப்பு நடவடிக்கைகள் துவங்க உள்ளன.

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் அதன் எதிரொளியாக கோவையில் எல்லை சோதனை சாவடிகளில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கேரள மாநிலம் கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோழிகள் வாத்துகள் ஆகியவை தொடர்ச்சியாக உயிரிழந்து வந்த நிலையில் அதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவிற்கு அனுப்பப்பட்டது.

அந்த மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டதில் உயிரிழந்த கோழிகள் வாத்துகள் பறவை காய்ச்சலால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முடக்கி விடப்பட்டு தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

அதே சமயம் தமிழகத்திலும் கேரள எல்லை சோதனை சாவடிகளில் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியதை தொடர்ந்து தமிழக கேரள எல்லை சோதனை சாவடிகளில் சுகாதார துறையின் சார்பில் பறவைக்காய்ச்சல் தடுப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கிருமி நாசினிகள் தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வாளையார் சோதனை சாவடியில் சுகாதாரத்துறை கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் இறைச்சி வாகனங்கள் கோவையிலிருந்து இறைச்சிகளை ஏற்று சென்று விட்டு திரும்பும் வாகனங்கள் அனைத்திற்கும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வாகனம் எங்கிருந்து வருகிறது எங்கு செல்கிறது என்று அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன.

அதுமட்டுமின்றி வாகனங்களை இயக்கி வரும் ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்தே கோவை மாவட்டத்திற்குள் அந்த வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

முதற்கட்டமாக வாளையார் சாதனை சாவடியில் இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இனி தொடர்ந்து அனைத்து எல்லை சோதனை சாவடிகளிலும் முகாம்கள் அமைக்கப்பட உள்ளது.

கால்நடை பராமரிப்பு துறை கோவை மண்டல இணை இயக்குனர் மருத்துவர் மகாலிங்கம் மற்றும் சென்னை நோய் நிகழ்வியல் அலுவலர் அகிலன் ஆகியோர் தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Recent News

Video

Join WhatsApp