கோவை: ராமதாஸ் குறித்த பயோ பிக் “அய்யா” படம் நடிப்பதில் கூடுதல் பொறுப்பு உள்ளது என நடிகர் பிக்பாஸ் ஆரி கோவையில் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு மற்றும் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து, கோவையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கான பிரத்தியேக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
இதனை நேற்று கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஒலிம்பிக் ஜோதி ஏற்றி துவக்கி வைத்து குழந்தைகளை வாழ்த்தி பாராட்டினார்.
கோவையில் உள்ள பல்வேறு இல்லங்களை சார்ந்த 400க்கும் மேற்பட்ட ஆண், பெண் குழந்தைகள் கலந்துகொண்ட இந்த விளையாட்டு போட்டியின் இரண்டாம் நாடாளான இன்று, சிறப்பு விருந்தினராக நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த பிரபல தமிழ் திரைப்பட நடிகர் பிக் பாஸ் ஆரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகள் முன்னிலையில் உரையாற்றி உற்சாகப்படுத்தினார்.
தொடர்ந்து, நடிகர் ஆரி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சமுதாயத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு, பொதுத்தளத்தில் உள்ள அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும். மற்றவர்களை விட ஆசிரம இல்லங்களில் வாழும் குழந்தைகள் கடும் போராட்டத்தையும், நெருக்கடியையும் சந்தித்து வருகிறார்கள்.
அவர்களுக்கு சமூகம் பக்க பலமாக உதவி செய்து, அவர்களின் வாழ்வை உயர்ந்த முடிந்த உதவிகளை செய்து தர வேண்டும்.
மருத்துவர் ராமதாஸ் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் “அய்யா” பையோ பிக் படப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் ஆரம்பமாகும். ராமதாசின் சமூகப் பணிகள் குறித்து ஏராளமான விடயங்கள் வெளியே வராத நிலையில், இப்படத்தில் ராமதாசின் பல சமூக பணிகள் இடம் பெறும்.
இயக்குநர் சேரன் இரண்டு வருடங்களாக இதற்கான தரவுகளை திரட்டி எடுத்துள்ளார். அரசியலில் நெடும் அனுபவம் கொண்ட ராமதாசின் பயோ பிக்-கில் நடிப்பது, திரைப் பயணத்தில் புது அனுபவம். இந்த பட வேலைகள் கூடுதல் பொறுப்பை ஏற்படுத்தி உள்ளது.
நான் வாக்கு அரசியலில் உள்ளேன். ஒவ்வொருவருக்கும் ஒருபார்வை இருக்கின்றது. நடிகர் விஜய் தன் ரசிகர்களை அரசியல்படுத்த ஆரம்பித்திருக்கின்றார். நலத்திட்டங்கள், மக்கள் பணிகள், செயல் திட்டங்களைப் பார்த்து, தமிழ்நாட்டு மக்கள் தங்களுக்கான தலைவர்களை தேர்நதெடுத்து வருகின்றனர்.
அந்த ரேசில் நடிகர் விஜய் வந்திருக்கின்றார். அவர் அரசியல் பயணத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இவ்வாறு நடிகர் ஆரி தெரிவித்தார்.