கோவை: கோவையில் தேசிய காப்பீட்டு நிறுவனம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை, போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
விழிப்புணர்வு நடைபயண பேரணி, வாகன பேரணி, ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு போன்ற பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக இன்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தேசிய காப்பீட்டு நிறுவனம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இதில் தேசிய காப்பீட்டு நிறுவன அலுவலர்கள், ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மெதுவாக வாகனங்களை இயக்க வேண்டும், காப்பீடு செய்து கொள்ள வேண்டும், சாலை பாதுகாப்பு குறித்து என்றென்றும் விழிப்புடன் இருக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.
முன்னதாக சாலை பாதுகாப்புக்குறித்து கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து காப்பீட்டு நிறுவனம் பணியாளர்கள் அலுவலர்கள் பொதுமக்கள் என பலரும் கையெழுத்திட்டனர்.

