கோவை: தமிழ் திரையுலகில் புதிய படமாக “அந்த 7 நாட்கள்” வரும் செப்டம்பர் 12ம் தேதி வெளியாக உள்ளது.
பாக்யராஜ் நடித்து இயக்கிய படம் “அந்த 7 நாட்கள்”. இப்படம் கடந்த 1981ல் வெளியாகி வெற்றிநடை போட்டது.
இதனிடையே, தற்போது “அந்த 7 நாட்கள்” என்ற அதே தலைப்பில், பாக்யராஜ் மீண்டும் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார்.
ரொமான்ஸ் மற்றும் சஸ்பென்ஸ் கலந்து உருவாகியுள்ள இப்படத்தை எம். சுந்தர் எழுதி இயக்கியுள்ளார். முரளி கபீர்தாஸ் தயாரித்திருக்கும் இந்த படம், தரமான ரொமான்டிக் திரில்லராக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சச்சின் சுந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் அஜிதேஜ், ஸ்ரீசுவேதா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், ரசிகர்களை கவரும் வகையில் நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் கதைக்கு ஆழத்தை சேர்க்கும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
கோபிநாத் துரை ஒளிப்பதிவில், முத்துமிலன் ராமு எடிட்டிங் மற்றும் VFX பணிகளை செய்துள்ளார்.
இப்படத்தில் காதலும், அதிரடி திருப்பங்களும், ரொமான்டிக் திரில்லர் காட்சிகளும் இடம் பெற்றுள்ளதால், ரசிகர்களை கவரும் என்றும், சச்சின் சுந்தர் காதலையும், சஸ்பென்ஸையும் பிரதிபலிக்கும் இசையமைத்துள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
படத்தின் பாடல்கள், டீசர்கள், பின்னணி காட்சிகள் ஆகியவை வெளியீட்டுக்குத் தயாராகிக் வருகின்றன.