கோவை: கோவையில் 9 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 80 ரூபாய் பிரச்சனையால் ஏற்பட்ட அடிதடி சம்பவத்தில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் ஞானராஜ்(38). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான சோமசேகர்(37) என்பவரிடம் ரூ.80 கடன் வாங்கினார்.
சோமசேகர் தான் கொடுத்த பணத்தை அடிக்கடி திரும்ப கேட்டும் ஞானராஜ் கொடுக்கவில்லை. இதனால் அவர்களுக்கிடையே மோதல் போக்கு இருந்து வந்தது.
இந்நிலையில், நேற்று சோமசேகர், ஞானராஜை ரத்தினபுரி கண்ணப்ப நகரில் உள்ள மின்மயானம் அருகே வர சொன்னார்.
அவர் அங்கு சென்றபோது, சோமசேகர் உட்பட 3 பேர் இருந்தனர். அவர்களுக்கிடையே 80 ரூபாய் பிரச்சனை காரணமாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து ஞானராஜை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் 3 பேரும் அவரை மிரட்டி சென்றனர். இது குறித்து ஞானராஜ் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானராஜை தாக்கிய ரத்தினபுரி காமாட்சி நகரை சேர்ந்த சோமசேகர், கவுண்டம்பாளையம் டிவிஎஸ் நகர் ரோட்டை சேர்ந்த பிரகாஷ்(42), வேலாண்டிபாளையத்தை சேர்ந்த ராம மூர்த்தி(46) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.