கோவை: கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான இருசக்கர வாகனப் பந்தயத்தை ஏராளமானோர் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
கோவையில் எம்ஆர்எப் நிறுவனம் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான சூப்பர் கிராஸ் சாம்பியன்ஷிப் இரண்டாவது சுற்று இருசக்கர வாகன பந்தயத்தில் மண்மேடுகளை தாண்டி விண்ணில் பறந்து சாகசம் புரிந்த பைக் பந்தய வீரர்களை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
பிரபல நிறுவனமான எம்ஆர்எப் நிறுவனத்தின் எம் ஆர் எஃப் ரேசிங் மற்றும் காட் ஸ்பீடு ஆகியவற்றின் சார்பில் எம்ஆர்எஃப் மோகிரிப் எஃப் எம் எஸ் சி ஐ நேஷனல் சூப்பர் கிராஸ் சாம்பியன்ஷிப் 2025 ற்கான இரண்டாம் சுற்று இரு சக்கர வாகன பந்தயம் கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது.
டர்ட் ரேஸ் எனும் இந்த பந்தயத்தில் பந்தய பாதையில் ஆங்காங்கே மண் மேடுகள் அமைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த சுமார் 65 வீரர்கள் 7 வீராங்கனைகள் மற்றும் 6 சிறுவர் சிறுமியர் உள்ளிட்டோர் இந்த பந்தயத்தில் பங்கேற்றனர்.
10 வயதிற்கு உட்பட்டோர், 15 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் மோட்டோ கிராஸ் ஓபன் கேட்டகிரி என எட்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட பந்தயத்தில் சிறுமியர் உட்பட ஒவ்வொருவரும் தங்கள் திறமையை நிரூபித்தனர். ஒவ்வொரு போட்டிக்கும் ஒன்பது சுற்றுகள் வீதம் நிர்ணயிக்கப்பட்ட சூழலில் ஒவ்வொரு சுற்றிலும் முந்தி சென்ற வீரர்கள் மண் மேடுகளை தாண்டி விண்ணில் பறந்து சாகசம் புரிந்தனர்.
இருசக்கர வாகனத்தில் அந்தரத்தில் பறந்து பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து படைத்த பந்தய வீரர்கள் பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.இதே போல் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து கேலரிகளிலும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் குவிந்து கைத்தட்டி ஆரவாரித்து இருசக்கர பந்தய வீரர்களை உற்சாகமூட்டினர்.
முதல் சுற்று புனேயிலும் இரண்டாம் சுற்று கோவையிலும் முடிந்துள்ள நிலையில் அடுத்த சுற்று போட்டிகள் குஜராத்தில் நடைபெறும் எனவும் அடுத்தடுத்து ஆறு சுற்றுகள் நடத்தப்பட்டு புள்ளிகள் அடிப்படையில் இறுதியில் தேசிய சாம்பியன் அறிவிக்கப்படுவார் எனவும் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.