கோவை: ஆட்டோ மீது மோதிய விபத்த்ல் கார் ஒன்று சிங்காநல்லூரில் சாக்கடை கால்வாயில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.
தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே துவங்கியதால் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. சில இடங்களில் சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கி உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். நேற்று இரவு முதல் இன்று காலை வரை மழை விட்டு, விட்டு பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில், சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தில் கார் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார், ஆட்டோ மீது மோதியதில் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த சாக்கடை கால்வாயில் தலை குப்புற கவிழ்ந்தது.
இதில் காருக்குள் டிரைவர் சிக்கி கொண்டார். வெளியே வர முடியாமல் தவித்தார். இதனை பார்த்தவர்கள் உடனே போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த பீளமேடு தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிக்குமார் தலைமையிலான வீரர்கள் காருக்குள் சிக்கிய டிரைவரை பத்திரமாக மீட்டனர்.
லேசான காயமடைந்த அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், காரை ஓட்டி வந்தது கேரளா மாநிலம் ஆலுவாவை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து கிரேன் மூலம் கால்வாயில் விழுந்த காரை மீட்டனர்.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.