கோவை: ஊதியம் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும், உடனே ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் தினமும் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் மருத்துவ அவசரகால நிபுணர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் 300க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறோம்.
சட்டவிரோதமான 12 மணி நேர வேலை, குறைந்த ஊதியம் என்றபோதிலும் உயிர் காக்கும் பணியை செய்து வருகிறோம்.
இதனிடையே நாங்கள் பணிபுரிந்த ஜனவரி மாதத்திற்கான ஊதியம் எங்களுக்கு வழங்கப்படவில்லை. இது நேர்மையற்ற தொழில் நடைமுறையாகும்.
எனவே தொழிலாளர் நலத்துறை மூலம் சம்பந்தப்பட்ட EMRI-GHS நிர்வாக அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு ஜனவரி மாத நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும்.
மேலும், இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் இது நாள் வரையில் நடைமுறையில் இருந்தது போல 1ஆம் தேதி ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

