கோவை: கோவையில் நெடுஞ்சாலையை கடந்த கார் மீது மோதிய பள்ளி பேருந்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை – பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி மாணவர்களுடன் வந்த பேருந்து ஒன்று கார் மீது மோதி விபத்துக்கு உள்ளான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வீஸ் சாலையில் இருந்து நெடுஞ்சாலைக்கு நுழையும் போது ஏற்பட்ட கவனக்குறைவே இந்த விபத்திற்கு காரணம் என தெரியவந்து உள்ளது.
கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் குனியமுத்தூர் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்து உள்ளது. சர்வீஸ் சாலை வழியாக வந்த கார் ஒன்று தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றது. அப்பொழுது வலது புறம் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களை சரியாக கவனிக்காமல் கார் ஓட்டுநர் சாலையை கடக்க முயன்று உள்ளார்.
அதே நேரத்தில் நெடுஞ்சாலை வலது புறமாக மாணவர்களுடன் வந்த பள்ளி பேருந்து எதிர்பாராத விதமாக காரின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பேருந்து காரை சிறிது தூரம் வரை இழுத்துச் சென்றது.
இந்த விபத்தின் முழுமையான காட்சிகள் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
அந்த வீடியோவில் பேசும் ஒரு நபர் பள்ளி பேருந்து மிக வேகமாக வந்ததால், தான் இந்த விபத்து நேர்ந்ததாக மலையாள மொழியில் பேசுகிறார். எனினும் சர்வீஸ் சாலையில் இருந்து பிரதான சாலைக்கு வரும் பொழுது கார் ஓட்டுநர் வலது புறம் வாகனம் வருகிறதா ? என்று நிறுத்தி பார்த்து கடக்க வேண்டும், கவனிக்காமல் கடக்க முயன்றதால் விபத்துக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

