புகையில்லா போகியை கொண்டாட கோவை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்…

கோவை: புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் திருநாளுக்கு முன்பு பழையது கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையினை முன்னோர்கள் கொண்டாடி வந்துள்ளனர். இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்துள்ளனர். இச்செய்கையால் காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது.

ஆனால் இன்றைய சூழலை போகிப்பண்டிகையின் பொழுது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப் காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.

கோயம்புத்தூர் மாநகரில் போகி அன்று எரிக்கப்படும் அது போன்ற பொருட்களால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்றவற்றால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இத்தகைய செயல்கள் பொது மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமையால் ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்க, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் கடந்த 21 ஆண்டுகளாக போகிப்பண்டிகைக்கு முன் பொதுமக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றது.

இதன் காரணமாக கடந்த வருடங்களில் பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர், டியூப் போன்றவற்றை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது. அதன்படி இந்த 2026 ஆம் ஆண்டும் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், கோயம்புத்தூர் மாநகரம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இவ்வருடம் பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர் ட்யூப் எரிக்காமல் சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் போகிப்பண்டிகையைக் கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp