கோவை: வீர தீர செயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 16 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கும் பொருட்டும் பாடுபட்டு வீர தீர செயல் புரிந்த 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசின் விருதாக பாராட்டு பத்திரமும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
அதன் படி பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு எதாவது வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக ஆவணங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வு ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்ற வீர தீர செயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது
இதையடுத்து 2025-2026ம் ஆண்டு பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும் 13 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24ம்தேதி விருது வழங்கப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விண்ணப்பிக்க 20ம்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இது வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாதவர்கள் (https://awards.tn.gov.in) என்ற இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



