கோவை: கோவையில் அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்டு, அவர்களுடன் கேரம் விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் படி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் மக்களைத் தேடிச்சென்று குறைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்.
அந்த வகையில், மேட்டுப்பாளையத்தில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தலைமையில் உங்களைத்தேடி உங்கள் ஊர் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, சிக்கதாசம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் அங்கு, மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு குறித்து ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். முன்னதாக உணவை வீணாக்காமல் சாப்பிடுவது குறித்து மாணவர்கள் உறுதிமொழியேற்றனர். தொடர்ந்து அப்பள்ளியில், வாங்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், மாணவர்களுடன் கேரம் போர்டு உள்ளிட்ட விளையாட்டுகளை சிறிது நேரம் விளையாடினார். மாவட்ட ஆட்சியருடன் அமர்ந்து விளையாடியது மாணவர்களை உற்சாகப்படுத்தியது.