கோவை: அடிப்படை வசதிகள் இல்லாத சுடுகாட்டில் மாநகராட்சி வாகனங்களை நிறுத்த கட்டாயப்படுத்துவதாக ஒப்பந்த நிறுவனம், மாநகராட்சி அதிகாரிகள் மீது ஓட்டுநர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை ஏற்றி செல்ல 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதற்கான சீனிவாசா மேனேஜ்மெண்ட் என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் பணியாமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோவை மாநகராட்சி கிழக்கு மற்றும் மேற்கு மண்டலத்தில் பணிமனைகளில் வாகனங்களை நிறுத்தி இயக்கி வந்த நிலையில் தற்போது அந்தந்த மண்டலத்துக்குட்பட்ட சுடுகாடுகளில் வாகனங்களை நிறுத்தி இயக்க வேண்டும் என ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாகவும் அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் உடந்தையாக செயல்படுவதாகவும் தெரிவித்து ஓட்டுநர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க வந்தனர்.
மனு அளிக்க வந்தவர்கள் அதிகாரிகளின் கட்டாயப்படுத்துதலை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். எந்த வித அடிப்படை வசதியும் இல்லாத சுடுகாடுகளில் மாநகராட்சி வாகனங்களை நிறுத்த அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாகவும் இது குறித்து கேட்ட நான்கு ஓட்டுநர்களை எந்த முன்னறிவிப்பும் விளக்கமும் இன்றி பணி நீக்க நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
மேலும் சட்டபூர்வ தொழிலாளரர்கள் பலன்களான இஎஸ்ஐ , பிஎப் பிடித்தம் செய்வதையும் முறையாக தொழிலாளர்கள் கணக்கில் செலுத்தாமல் , காலம் தாழ்த்தி வருவதாகவும், காழ்ப்புணர்ச்சியுடன், ஓட்டுனர்கள் மீது தீண்டாமை எண்ணத்துடன் அதிகாரிகள் நடந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ள ஓட்டுனர்கள் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


