கோவை: கோவையில் மதுபோதையில் மூவர் சென்ற கார் மற்றொரு கார் மீது மோதிய கோர விபத்தில் ஐ.டி நிறுவன உரிமையாளர் உயிரிழந்தார்.
மலுமிச்சம்பட்டி குருவாயூர் நகரை சேர்ந்தவர் அந்தோணி பால் ரிச்சர்ட் (32). இவர் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ஐ.டி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.
இன்று காலை அந்தோணி பால் ரிச்சர்ட் தனது நண்பர்கள் மலுமிச்சம்பட்டி கதிரேசன் (31), மசக்காளிபாளையம் ராஜ்கமல் (32) ஆகியோருடன் காரில் பீளமேடு சென்று கொண்டு இருந்தார்.
அந்தக் காரை கதிரேசன் ஓட்டினார். கார் பீளமேடு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் நின்றிருந்த மற்றொரு கார் மீது மோதியது.
போதையால் விபத்து
இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு அந்தோணி பால் ரிச்சர்ட்டை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். கதிரேசன் மற்றும் ராஜ்கமல் ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வாகனத்தில் இருந்தவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

