கோவை: கோவையில் கஞ்சா பதுக்கி விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை நகரில் கஞ்சா, போதை மாத்திரை, குட்கா விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று செல்வபுரம் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது தெலுங்குபாளையத்தில் உள்ள ஒரு காலி இடத்தில் நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்து சந்தேகத்தில் விசாரித்தனர். அதில் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் கஞ்சா விற்ற தெலுங்குபாளையம் வேடப்பட்டி ரோட்டை சேர்ந்த சத்யபாரதி (21) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை போத்தனூர் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த குனியமுத்தூர் கரும்புக்கடையை சேர்ந்த அப்துல் ரசாக்(55), ஆத்துப்பாலத்தை சேர்ந்த அபுபக்கர் சித்திக்(29) ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோல், ஆவாரம்பாளையம் கேஆர் புரம் அருகே கஞ்சா விற்றுக்கொண்டிருந்த பாப்பநாயக்கன்பாளையம் எரிமேட்டை சேர்ந்த பிரவீன்(25) என்பவரை நேற்று பீளமேடு போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் மாரியம்மன் கோயில் அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த இடையர்பாளையத்தை சேர்ந்த முருகேசன் (52) என்பவரை நேற்று மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 2.700 கி.கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

