கோவை: தொழில்துறை தொடர்பாக 16 எம்பிக்கள் அடங்கிய குழு கோவைக்கு வருகை புரிந்தனர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அண்மையில் இந்தியா மீது 50 சதவீத வரி விதித்ததை தொடர்ந்து தொழில்துறை நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்த வரியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அறிவதற்கும் , அமெரிக்க இந்திய வர்த்தக உறவு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளவும் மாநிலங்களவை உறுப்பினர் டோலா சென் தலைமையில் 16 எம்பிகள் கொண்ட குழு ஒன்று சில தினங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் முக்கிய நகரங்களில் தொழில்துறையினரை சந்தித்து கருத்துக்களை வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று அக்குழுவினர் கோவைக்கு வருகை புரிந்தனர்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் டோலா சென் வரி விதிப்புக்கு பிறகு என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது அதற்கு தீர்வு காண்பதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்ய வந்துள்ளதாக தெரிவித்தார்.
சென்னையில் ஆட்டோ மோட்டிவ் துறை, லெதர் துறை(தோல் பதனிடும் துறை) ஆகியவற்றில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்துள்ளதாகவும், இன்று கோவையில் ஜவுளி துறை உள்ளிட்ட பல்வேறு துறையினரை சந்தித்து பிரச்சனைகளை கேட்டறிய உள்ளதாக தெரிவித்தார். வங்கி அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்த மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

